Friday, January 28, 2011

புற்றுநோயாளிகள் கணக்கெடுப்பு குறித்து வஜீஹா கல்லூரியில் விளக்கக் கூட்டம்! ரியாத், ஜித்தா, தம்மாம் மன்றங்கள் நடத்தின!!

காயல்பட்டினம் நகரில் பெருகி வரும் புற்றுநோயை ஒழிப்பதற்கான முயற்சிகள் பல வழிகளிலும், பல வகைகளிலும் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தோர், தற்சமயம் சிகிச்சை பெற்று வருவோர், புற்றுநோயை வென்றோர் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, வயது, வகை வாரியாக பிரித்தறிந்தால் மட்டுமே புற்றுநோய் ஒழிப்பு செயல்திட்டங்கள் முழு வெற்றி பெறும் என்று, 13.01.2011 அன்று ரியாத் காஹிர் பைத்துல்மால், தம்மாம் காயல் நற்பணி மன்றம், ஜித்தா காயல் நற்பணி
மன்றம் ஆகியவற்றின் அங்கத்தினர், சஊதி அரபிய்யா ரியாதில் நடத்திய கூட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய புற்றுநோய் மருத்துவ விஞ்ஞானி டாக்டர் மாசிலாமணி தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், நகரில் புற்றுநோயாளிகள் கணக்கெடுப்பு நடத்துவதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



புற்றுநோயாளிகளைக் கணக்கெடுப்பதற்காக வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் முன்னாள் மாணவியரை பயன்படுத்த அக்கல்லூரி நிர்வாகம் முழு ஒப்புதலளித்துள்ளது. அது மட்டுமின்றி, கணக்கெடுப்புக்காக அவர்கள் வீடுகளுக்குச் செல்கையில் அங்கிருப்போரைத் தயக்கமின்றி ஒத்துழைப்பளிக்கச் செய்வதற்காக தற்சமயம் அக்கல்லூரியில் பயிலும் நகரின் பல பகுதிகளைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவியருக்கு போதிய விளக்கமளிக்கும் பொருட்டு 26.01.2011 அன்று காலை 10.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் விளக்கக் கூட்டம், கல்லூரியின் நிறுவனர் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

கல்லூரியின் துணைச் செயலர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், நிர்வாக அதிகாரி முனைவர் கம்சா முகைதீன், முதல்வர் மெர்ஸி ஹென்றி, தம்மாம் காயல் நற்பணி மன்ற உறுப்பினர் அமீர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியை அருணா ஜோதி நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். கடந்த ஆண்டு கே.எம்.டி. மருத்துவமனையில் காயல் நல மன்றங்கள் பல இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை முகாமில் தமது கல்லூரி மாணவியர் தன்னார்வப் பணியாளர்களாக கலந்துகொண்டனர் என்றும், தாம் அவர்களை வழிநடத்தியதாகவும், அந்நேரம் பல அனுபவங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தனதுரையில் நினைவுகூர்ந்தார்.

துவக்கமாக, இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.அய்.புகாரீ விளக்கவுரையாற்றினார். புற்றுநோய் என்றால் என்ன, அது எங்ஙணம் தாக்குகிறது, புற்றுநோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் என்ன, அவர்களின் மனநிலையை நாம் எப்படி வைத்துக்கொள்ள வேண்டும், காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கு சந்தேகிக்கப்படும் காரணிகள் குறித்து தனதுரையில் அவர் தகவல்களைத் தொகுத்தளித்தார்.



பின்னர், புற்றுநோயாளிகள் கணக்கெடுப்பின்போது பேணப்பட வேண்டிய ஒழுங்கு முறைகள் குறித்து ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ விளக்கிப் பேசினார். கணக்கெடுப்பிற்காக கல்லூரியின் முன்னாள் மாணவியர் வீடுகளுக்கு வருகையில், அங்கிருக்கும் தற்போதைய மாணவியர் தமதில்லங்களிலும், தமது உறவினர்களின் இல்லங்களிலும் இதுபோன்ற புற்றுநோயாளிகள் இருந்தால் அவர்களின் தயக்கத்தைப் போக்கி, கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பளிக்கச் செய்வதை ஒவ்வொரு மாணவியும் தனது கடமையாக எண்ணி செய்திட வேண்டுமென அவர் தனதுரையில் தெரிவித்தார்.



இறுதியாக கருத்து தெரிவித்த தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ், இதுபோன்ற நகர்நலப் பணிகளைச் செய்வதற்கு இக்கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பளிப்பது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவைத் தருவதாகவும், முன்னாள் மாணவியரைக் கூட நகர்நலப் பணிகளில் ஈடுபடுத்தும் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடு பாராட்டத்தக்கது என்றும், தற்சமயம் கல்லூரியில் பயின்றுகொண்டிருக்கும் மாணவியர் தமது படிப்பு முடிந்து கல்லூரியை விட்டும் பிரிந்துவிட்டாலும், என்றும் தொடர்போடிருந்து, இதுபோன்ற நகர்நலப் பணிகளை முன்னின்று செய்திட ஆர்வம் காட்ட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தை ஏற்பாடு செய்து தந்து பல பயனுள்ள கருத்துக்களை மாணவியரிடம் சேர்ப்பிக்க முழு உறுதுணையளித்த கல்லூரி நிர்வாகத்திற்கு, ரியாத், ஜித்தா, தம்மாம் காயல் நல மன்றங்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

குடியரசு தின விழா நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அன்று காலை 08.00 மணிக்கே கல்லூரிக்கு வந்திருந்த மாணவியர், குடியரசு தின விழா நிறைவுற்று, அதனைத் தொடர்ந்து புற்றுநோய் கணக்கெடுப்பு குறித்த விளக்கக் கூட்டமும் நிறைவுறும் வரை அமைதியாக அமர்ந்து அவதானித்தது தமக்கு பெரும் மனநிறைவளித்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



செய்தி திருத்தப்பட்டது (29/1/2011)

No comments:

Post a Comment